Thambiluvil chat

The Srilanka And world news

Tuesday, August 12, 2008

ஒலிம்பிக்: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா-வரலாறும் படைத்தார்


 
Abhinav Bindra
பெய்ஜிங்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒலிம்பிக் தங்கம் இது. மேலும் தனி நபர் ஒருவர் இந்தியாவுக்காக தங்கம் வென்றதும் இதுவே முதல் முறையாகும்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே இந்தியாவுக்கு ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய காலை இந்தியாவுக்கு தங்கமான காலையாக புலர்ந்துள்ளது. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை தட்டி புதிய வரலாறு படைத்தார்.

தகுதிச் சுற்றில் 500 புள்ளிகள் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த பிந்த்ரா, அதில் 700.5 புள்ளிகள் வென்று முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு ...

இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்திருப்பது கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இந்தியா, 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்றிருந்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கும், தங்கப் பதக்கத்திற்கும் வெகு தூரமாகி விட்டது.

லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நழுவ விட்டிருந்தது.

கடந்த ஒலிம்பிக்கில் மயிரிழையில் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தவற விட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரும் துப்பாக்கி சுடுதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில், 28 ஆண்டு கால தங்கப் பதக்க வறட்சிக்கு இந்தியா தற்போது முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

முதல் வீரர்:

மேலும், ஒலிம்பிக் போட்டியில் தனி நபர் வீரர் யாரும் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றதில்லை. அந்த வகையில் பிந்த்ரா புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.

ஹரியாணா, மகாராஷ்டிரம், ம.பி. பரிசு:

தங்கம் வென்றுள்ள பிந்த்ராவுக்கு ஹரியாணா அரசு ரூ. 25 லட்சமும், மகாராஷ்டிர அரசு ரூ. 10 லட்சமும் பரிசு அறிவித்துள்ளன. அதே போல மத்திய பிரதேச அரசும் ரூ. 5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

சட்டீஸ்கர் முதல்வர் ரமன் சிங், பிந்த்ராவுக்கு ரூ. 1 லட்சம் பரிசளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரதமர், சோனியா வாழ்த்து:

தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அடக்கமான பிந்த்ரா:

தங்கப் பதக்கம் வென்றது குறித்து பிந்த்ரா கூறுகையில், இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி. இந்த விருதை என் பெற்றோர், குடும்பம், பயிற்சியாளர்களுக்கு சமர்பிக்கிறேன் என்று அடக்கத்துடன் கூறினார்.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில், இந்திய வரலாற்றில் இது மிகவும் முக்கியமான நாள். பிந்த்ராவின் வெற்றியால் இந்தியாவுக்கே பெருமை கிடைத்து விட்டது என்றார்.

பிந்த்ரா சாதனை படைத்த அதே நேரத்தில் இந்தியாவின் இன்னொரு வீரரான ககன் நரங் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

பிந்த்ரா பங்கேற்ற அதே பிரிவில்தான் நரங்கும் கலந்து கொண்டார். 600க்கு 595 என்ற புள்ளிகளையே அவர் பெற்றதால், இறுதிச் சுற்றுக்கு நரங் தகுதி பெற முடியாமல் போனது.

கிரிக்கெட் வாரியம் ரூ.25 லட்சம் பரிசு:

இந்திய கிரிக்கெட் வாரியமும் பிந்த்ராவுக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிந்த்ராவுக்கு இதயப்பூர்வ வாழ்த்துக்கள். நாட்டுக்கு அவர் பெருமை தேடித் தந்துள்ளார். இந்திய விளையாட்டுத் துறைக்கு புதிய பெருமையை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ரூ. 25 லட்சம் பரிசளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஜெ. வாழ்த்து:

பிந்த்ராவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அபினவுக்கு வெற்றியும் புகழும் வரும் காலத்திலும் தொடர தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

போட்டியின் இறுதியில் கடுமையான சூழல்நிலையை தைரியமாக எதிர்க் கொண்டது அபினவ்வின் தெளிவை காட்டுகிறது. 'வெற்றிகள் தொடரட்டும். உங்களின் வெற்றி எங்களுக்கு பெருமை அளிக்கிறது' என்று கூறியுள்ளார்.
--
People Of Thambiluvil

No comments:

site statistics