Thambiluvil chat

The Srilanka And world news

Wednesday, August 6, 2008

உலோக கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட இயந்திரத்தின் மூலம் உயிர்பிழைத்த சிறுமி


 வீரகேசரி நாளேடு 8/6/2008 9:02:45 PM - கார் திருத்துமிடத்தில் இருந்து பெற்ற உலோகங்களைப் பயன்படுத்தி மருத்துவர் ஒருவரால் சுயமாக வடிவமைக்கப்பட்ட கருவி மூலம், சிறுநீரகம் செயலிழந்த பச்சிளம் குழந்தையொன்று காப்பாற்றப்பட்ட அதிசயம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. மில்லி கெல்லி என்ற இந்தக் குழந்தை, குடல் பகுதி உடலுக்கு வெளியே தள்ளிய நிலையில் பிறந்தது.

இந்நிலையில் மேற்படி குறைபாட்டை சீர்செய்யும் முகமாக சத்திரசிகிச்சையொன்றுக்கு குழந்தை உட்பட்ட சமயம், அதன் சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்தன. இத்தகைய நெருக்கடியான நிலையில் வழமையாக சிறுநீரகம் செயலிழந்த குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் செயற்கை உபகரணத்தை இக்குழந்தைக்கு பொருத்த முடியாத வகையில், குழந்தை மிகவும் சிறியதாக காணப்பட்டதால் என்ன செய்வது என மருத்துவர்கள் திண்டாடினர்.

மேற்படி மருத்துவ சிகிச்சைக்கு தலைமை தாங்கிய மருத்துவர் மல்கொல்ம் கோல்தார்ட், சிரேஷ்ட சிறுவர்கள் சிறுநீரக சிகிச்சை தாதியான ஜீன் குரோஸியர் என்பவருடன் இணைந்து கார் திருத்துமிடத்திலிருந்து பெறப்பட்ட பொருட்களை உபயோகித்து சிறிய சிறுநீர் சுத்திகரிப்பு உபகரணமொன்றை உருவாக்கினார்.

இதனையடுத்து குழந்தையின் சொந்த சிறுநீரகங்கள் குணமடையும் வரை 7 நாட்களுக்கு இந்த உபகரணம் பொருத்தப்பட்டது. இந்த உபகரணத்தின் மூலம், சிறிது சிறிதாக இறப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறுமி, தற்போது உயிர் பிழைத்து ஆரோக்கிய நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

தனது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் குறித்து அதன் தாயாரான ரெபேகா விபரிக்கையில், ""வர்ணப்பூச்சு அடையாளங்களுடன் பச்சை நிறத்தில் காணப்பட்ட அந்த உலோகப் பெட்டி எனது மகளின் உயிரைக் காப்பாற்றப் போகிறது என நான் கனவிலும் நம்பவில்லை. தற்போது எனது மகளுக்கு இரண்டு வயதாகிறது. அவள் தனது சொந்த சிறுநீரகங்களுடன் இயல்பு வாழ்க்கை வாழ்கின்றாள்'' என்று கூறினார்

--
People Of Thambiluvil

No comments:

site statistics